சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறது.! அமைச்சர் சேகர்பாபு.!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் , தமிழக பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு கேரள அரசுக்கு , தமிழக அரசு கோரிக்கை விடுத்தும் இருந்தது.

சபரிமலையில் முன்பதிவை நிறுத்த தேவசம் போர்டு முடிவு..!

சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் பற்றியும் தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் பற்றி ஏற்கனவே கேரள தலைமை செயலரிடம், நமது தலைமை செயலர் வலியுறுத்தினார். தமிழக முதல்வரும் கேரள அரசை கேட்டுக்கொண்டார். அதன்படி கேரள அரசு பக்தர்களுக்கு தேவையான வசதியை சிறப்பான வகையில் செய்து வருகிறது.

தமிழக முதல்வர் என்னையும் கேரள தேவசம்போர்டு தலைவரிடம் பேச கோரினார். அதன்படி நானும், அங்குள்ள அமைச்சரிடத்தில் பேசினேன், திருவிதாங்கூர்  தேவஸ்தானம், கேரள அரசு, கேரள காவல்துறையினர் நிலைமையை திறமையாக சமாளித்து கொண்டு வருகிறார்கள்.

நான் 45 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். 1 மணிநேரத்தில் 3500 பேர் தரிசனம் செய்ய முடியும். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 57, 58 ஆயிரம் எண்ணிக்கையில் தான் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இப்படியான சூழலில் பக்தர்களின் எண்ணிக்கை கூடும் போது கூட்ட நெரிசல் அதிகமாவது இயற்கையானது தான்.

மாலையில் தரிசனம் செய்தவர்கள் நெய் அபிஷேகம் செய்ய இரவு சன்னிதானத்தில் தாங்கும் சூழல் ஏற்பட்டு விடும். அதனால் அடுத்து இரவு தரிசனம் செய்வோரும் அங்கேயே இருக்கும் சூழல் நிலவுவதால் சன்னிதானத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். இப்படியான பல்வேறு சூழல்கள் இருந்தும் அதனை கேரள அரசு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சிறப்பாக கையாண்டு வருகிறது. வரும் காலத்தில் கேரள அரசு சிறப்பாக திட்டமிட்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.