உபரி நீரை தந்து தர வேண்டிய நீரை தராமல் ஏமாற்றியுள்ளது கர்நாடகா… தமிழக அரசு சார்பில் கோரிக்கை…

தமிழகத்திற்கு உபரி நீரை தந்து, தர வேண்டிய நீரை தராமல்  கர்நாடகா ஏமாற்றியுள்ளது’ என, காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டு உள்ளது.

காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  தலைவர் நவீன்குமார் தலைமையில், டெல்லியில் நேற்று கூடியது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழகத்தின் சார்பில், காவிரி தொழிற்நுட்பப் பிரிவு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்பட  நான்கு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தமிழகம் தரப்பில் கூறியதாவது, நடப்பு ஆண்டுக்கான நீர் ஒதுக்கீட்டில், கர்நாடக அரசு, 14 டி.எம்.சி.,க்கு மேல் நிலுவை வைத்துள்ளது. இதை விரைந்து வழங்க வேண்டும். கர்நாடக அணைகள் மழையால் நிரம்பிய போது, அதிலிருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது. இந்த நீர் தான், தமிழகத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. உபரி நீரை தந்து, கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில், சம்பா நெல் சாகுபடி துவங்கி உள்ளது. எனவே, அதற்கு  நீர் அதிகம் தேவைப்படுகிறது. எனவே, இனிவரும் மாதங்களுக்கான ஒதுக்கீட்டு நீரை, நிலுவையின்றி வழங்க வேண்டும்.இவ்வாறு, தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக, கர்நாடக அணைகளுக்கு எவ்வளவு நீர் கிடைத்தது; அதில் எவ்வளவு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

author avatar
Kaliraj