ஜேசன் ராய், வில்லியம்சன் அரைசதம் .., தொடர் தோல்விக்கு பிறகு வெற்றியை பதித்த ஹைதராபாத்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடியது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கிய நிலையில், லூயிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 36 ரன்கள் அடித்து வெளியேறினார். இவர்களை தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 82 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய லோமோர் 29 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் பறிகொடுத்து 164 ரன்கள் எடுத்து. இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய்,
விருத்திமான் சாஹா இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் விருத்திமான் சாஹா 18 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், கேன் வில்லியம்சன் களமிறங்க ஜேசன் ராய் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அரைசதம் விளாசி 60 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதில் 8 பவுண்டரி, 1 சிக்ஸர் அடங்கும். அடுத்து இறங்கிய ப்ரியம் கார்க் வந்த முதல் பந்திலே அவுட் ஆனார்.

இதனைத்தொடர்ந்து, கூட்டணி அமைத்த கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

கடைசிவரை களத்தில் கேன் வில்லியம்சன் 51*, அபிஷேக் சர்மா 21* ரன்களுடன் நின்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளனர்.

author avatar
murugan