ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை உளவு பார்ப்பது மத்திய அரசா? பெகாசஸ் தொழிநுட்பமா? – வெளியான அதிர்ச்சி தகவல்!!

உளவு பார்க்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தி முன்பு பயன்படுத்திய இரண்டு எண்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

PEGASUS சாப்ட்வேர் மூலம் உளவு :

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளின் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் என பலரின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உளவு பார்க்கப்பட்ட பெயர் பட்டியல் :

இதனைக்குறித்து ஆய்வு மேற்கொண்டதில், PEGASUS சாப்ட்வேர் மூலம் உளவு பார்த்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், 40-க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்களது எண்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் உறவினர்களும் மற்றும் எம்எல்ஏ அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டவர்களின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய மத்திய அமைச்சர்களின் எண்களும் உளவு :

தற்போதைய இணை அமைச்சர் பிரகாலத் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் அலைபேசிகளும் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்த நிலையில், அவரின் செல்போனையே 2018, 2019ல் உளவு பார்த்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை தருகிறது.

உளவு குறித்து மத்திய அரசு மறுப்பு :

மேலும், ஒட்டு கேட்கப்பட்ட அலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தி முன்பு பயன்படுத்திய இரண்டு எண்களும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, மக்களவையில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் விவாதத்தை எழுப்பியுள்ளனர்.

மக்களவையில் எதிர்க்கட்சிகள் விவாதம் :

செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிடும்படி, காங்கிரஸ், சிவசேனா ராஷ்ட்ரிய ஜனதா தளம், மஜ்லிஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசு உளவு பார்க்கவில்லை என்றால் PEGASUS தொழில்நுட்பம் மூலம் வேறு யாரு உளவு பார்த்தது? என கேள்வி எழுப்பினர்.

பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தொடர்பு :

ராகுல் காந்தி உள்ளிட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகார் தெரிவித்தார்.  வெளிநாடுகளை சேர்ந்த யாராவது உளவு பார்த்திருந்தால் அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என எதிர்க்கட்சிகள் குற்றசாட்டி முழக்கம் எழுப்பியுள்ளனர்.

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் :

செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக ஊடங்களில் வெளியான தகவல்கள் தவறானது. தொழில்நுட்ப ரீதியாக சம்மந்தப்பட்ட தொலைபேசிகளை ஆய்வு செய்யாமல் உளவு பார்க்கப்பட்டது என முடிவு எடுக்க கூடாது என்றும் தொலைபேசிகளை உளவு பார்த்த நாடுகள் பட்டியல் தவறானது என மென்பொருள் தயாரித்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது எனவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

உளவு பார்ப்பது PEGASUS தொழிநுட்பமா? அல்லது மத்திய அரசா?:

மேலும், மத்திய அரசோ, மாநில அரசோ தொலைபேசிகளை உளவு பார்க்க வேண்டுமானால் அதற்கு விதிமுறைகள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே,  உளவு பார்ப்பது PEGASUS தொழிநுட்பமா? அல்லது மத்திய அரசா? என கேள்வி எழுந்து வரும் நிலையில், இந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதுகுறித்து அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையிலும், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக தற்போது பேசப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்