#INDvsSL : 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மதுஷங்க.. இலங்கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த இந்தியா!

INDvsSL : 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 33ஆவது லீக் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும், குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இலங்கை டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனால், இந்திய முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் போல்ட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தார்.

ஆனால், மறுபக்கம் சுப்மன் கில் மற்றும் களமிறங்கிய விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழக்காமல் அணிக்கு ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரை சதங்களை பூர்த்தி செய்தனர். பின்னர் விக்கெட்டை விடாமல் விளையாடி வந்த நிலையில், இருவரு சதங்களை அடித்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தனர். விராட் கோலி 94 பந்துகளில் 88 ரன்களும், சுப்மன் கில் 92 பந்துகளில் 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இதில், சுப்மன் கில் சிறப்பாக விளையாடினாலும், விராட் கோலி தனது சாதனையை தவறவிட்டார். இந்த உலகக்கோப்பையில் மட்டும் 3 சதங்களை தவறவிட்டுள்ளார்.

இதனிடையே, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி நான் யார் என்று நிரூபித்தார். பின்னர் அவரும் 56 பந்துகளில் 82 எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இலங்கை அணியை பொறுத்தவரையில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனவே, 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்