டோக்கியோ ஒலிம்பிக் ;வில்வித்தை தகுதி சுற்றில் 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தை தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 வது இடத்தை பிடித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகிறது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மேலும்,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இதற்கிடையில்,ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது.

தகுதிநிலை தரவரிசை சுற்று:

இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் தனிநபர் தகுதிநிலை தரவரிசை சுற்றில் இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர்.அதில்,இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ஒன்பதாவது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளார். இச்சுற்றில் 663 புள்ளிகளை பெற்ற தீபிகா குமாரி ஜூலை 27 ஆம் தேதியன்று நடைபெறும் போட்டியில்  பூட்டானின் கர்மாவை 32 சுற்றில் எதிர்கொள்ளவுள்ளார்.கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட தீபிகா குமாரி, தனிநபர் தகுதிப்பிரிவில் 20வது இடத்தை பிடித்திருந்தார்.

தீபிகா முதல் பாதியின் முடிவில் நான்காவது இடத்தைப் பிடித்தார், ஆனால் விரைவில் இரண்டாவது இடத்தில் நழுவினார்.அதன்பின்னர் இரண்டு இடங்களை இழந்து 9 வது இடத்தைப் பிடித்தார்.

தென்கொரியா முதலிடம்:

ஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்றில் முதல் மூன்று இடத்தை தென்கொரிய வீராங்கனைகள் பிடித்தனர்.அதன்படி,தென்கொரியாவை சேர்ந்த ஆன்ஷான் 680 புள்ளிகள் பெற்று புதிய ஒலிம்பிக் சாதனையுடன்  முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு முன்னர்,1996 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உக்ரைனின் லினா ஹெராசிமென்கோ 673 புள்ளிகள் பெற்றிருந்ததே ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.

தீபிகா குமாரி:

முன்னதாக தீபிகா வில்வித்தை போட்டியில் உலக முதலிடத்திலும் இருந்தார்.தற்போது உலகளவில் ஏழாவது இடத்தில் உள்ளார்.

கடந்த 2013 ஜூலை 22-ம் தேதி, கொலம்பியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் மூன்றாவது கட்டத்தில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றது.

இதுவரை உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகளில் தீபிகா 12 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களையும்,2010 காமன்வெல்த் போட்டி மற்றும் 2013 ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளார்.

விருது:

2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய விளையாட்டுத் துறையில்  மிக உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது.2014 ஆம் ஆண்டு இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்பு ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டாளராக தீபிகாவை கௌரவித்தது.மேலும்,2016இல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.