IND vs AFG: நாளை முதல் டி20 போட்டி… விராட் கோலியை சந்தித்த பிசிசிஐ!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் முக்கிய வாய்தவையாக பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அணியில் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி என இருவருமே இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்கு பின் இருவரும் டி20 அணிக்கு திரும்பி இருக்கின்றனர். இதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் பொறுத்தே டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. இதனால், இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 தொடரில் விராட் மற்றும் ரோஹித் ஆகிய இருவரின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

இந்தியாவில் நடக்கும் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள் – பிசிசிஐ அறிவிப்பு

இந்த நிலையில், மீண்டும் இந்திய டி20 அணியில் வருவதற்கு முன்னதாக விராட் கோலியை பிசிசிஐ தேர்வாளர்கள் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலியிடம் அவரது பலவீனம் குறித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னரே ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இடம் பெற்று இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, சுழற் பந்துவீச்சில் வலுவாக இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி தன்னை யார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும் பேட்டிங்கில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிக்க வேண்டும் எனவும் விராட் கோலியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்து பிசிசிஐ தேர்வாளர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனிடையே, ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோருடன் இதுபோன்ற விவாதம் நடந்ததா என்பது குறித்து தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்