தேர்தல் வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு – உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

தேர்தல் வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதனையடுத்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மிலானி கூறியதாவது,”அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும்,குறிப்பாக கடன் மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளதாகவும்,மேலும்,அவரது மனைவியின் பெயரில் வாங்கிய கடன்தொகையினையும் மறைத்ததனால்,இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வெற்றியை செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் அவர்கள்,இது தொடர்பாக செப்டம்பர் 24-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.