மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் இன்று தாக்கலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள், புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் இடம்பெற்றிருந்தது.

பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.

சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பட்ஜெட்டின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை!

சூரிய ஒளி மின்சாரம் – இலவச வீடுகள்:

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் சேர்க்கப்படுவார்கள்.

கர்ப்பப்பை புற்றுநோய்:

கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14  வயது பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும். 10 ஆண்டுகளில் 7 ஐஐடிகள், 15 எய்ம்ஸ், 390 பல்கலை.கள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!

வட்டியில்லா கடன்:

நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தெடர்பாக தனி குழு அமைக்கப்படும். தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 1.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.  40,000 ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும். மேலும் சில நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும்.

சுற்றுலா மேம்பாடு:

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி, முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும். ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வருமான வரியில் மாற்றமில்லை:

வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும். இதுபோன்று, நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை. வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.

Budget 2024 : வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.! – நிர்மலா சீதாராமன்.!

விமான நிலையங்கள்:

சோலார் பேனல் வைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம். 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும். 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும். நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையம் அதிகரிக்கப்படும் என்றும் தொழில்நுப்டம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும்பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment