ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிப்பதா? – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்.

நாட்டின் 73-வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட, தமிழக அலங்கார ஊர்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட தமிழக ஊர்தி மத்திய அரசால் நிராகரிக்கப்பட நிலையில் அந்த ஊர்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வடதமிழ்நாட்டு விடுதலை வீரர்களை புறக்கணிப்பதா?என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல என்று ஊறியுள்ளார்.

டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்