இந்திய பிரதமராகும் இபிஎஸ்.? அதிமுக எம்எல்ஏ கருத்து கணிப்பு.!

Election2024 : தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது.

மக்களவை தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சார வேலையில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே போல அரசியல் வெற்றி கருத்து கணிப்புகளையும்  பல்வேறு அரசியல் பிரபலங்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வர வாய்ப்புள்ளது என அதிமுக எம்எல்ஏ ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வந்த மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களிடம் தேர்தல் பற்றி கூறுகையில், இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களில், சிறு சிறு கட்சிகள் ஜெயித்து, தமிழகம் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றால் எடப்பாடி பழனிச்சாமி பிரதமராக வாய்ப்பு உள்ளது.

பிரதமராகும் வாய்ப்பு வரும் போது எடப்பாடி பழனிச்சாமியை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று பின்னர் பிரதமராவார். அறிஞர் அண்ணா கூட மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் தான். அப்படி தான் முன்னர் கர்நாடகவில் இருந்து தேவகவுடா பிரதமரானார் என குறிப்பிட்டார். ஆனால் இப்போது போட்டியிடும் பலருக்கு தங்கள் வெற்றி மீதே நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

மத்திய இணையமைச்சராக இருந்து கொண்டே (எல்.முருகன்) நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு, நேற்று மாநிலங்கவை எம்பியாக பதவியேற்று கொள்கிறார். மாநில அமைச்சராக பதவி விலகாமல் (நமச்சிவாயம் புதுச்சேரி) தேர்தலில் போட்டியிடுகின்றனர். எம்எல்ஏவாக இருந்து கொண்டே ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இனிமேல் அவரை மக்கள் பலாப்பழம் என்று கூப்பிட போகின்றனர் என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.