நான் ஏன் தூத்துக்குடிக்கு சென்றேன்.? விமர்சனங்களுக்கு தமிழிசை பதில்.!

தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார்.

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. தென் மாவட்டங்களில் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுத்திருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை அதையெல்லாம் சரியாக கவனித்து கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த பிரச்சனை வந்து இருக்காது. இந்த சூழ்நிலையை மாநில அரசு மிக மோசமாக கையாண்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

பாண்டிச்சேரி கவர்னர் வேலையை பார்க்க சொல்லுங்க.! தமிழிசைக்கு அமைச்சர் சேகர்பாபு அட்வைஸ்.!

தமிழிசையின் தூத்துக்குடி வருகையை திமுகவினர் பலர் விமரிசித்து இருந்தனர். அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், அவர் வேறு மாநில ஆளுநர் அந்த வேலையை பார்க்கவேண்டும். மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழிசை விரும்புகிறார் என விமர்சித்தார். அடுத்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், பேரிடர் குறித்து அரசை  விமர்சிக்கும் ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.  மேலும், சபாநாயகர் அப்பாவு பேசுகையில், தமிழிசை சௌந்தரராஜன் வேறு மாநில ஆளுநர். அவர், தமிழகம் வந்து ஆய்வு செய்ய அதிகாரமில்லை என விமரிசித்து இருந்தார்.

இந்த விமர்சனங்கள் குறித்து இன்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தூத்துக்குடி என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட ஊர். அங்குள்ள கொஞ்சம் மக்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள். அனைவரும் ஆதரவளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றேன்.

அமைச்சர் சேகர்பாபு கூறுவது போல, நான் மீண்டும் போட்டியிட போகவில்லை. சபாநாயகர் அப்பாவு, இவங்க யார் இங்க வந்து ஆய்வு செய்ய என கேட்கிறார்.  நான் தூத்துக்குடி சென்றது ஆய்வு செய்ய அல்ல. நன் இரு மாநில அதிகாரத்தில் பங்கு கொண்டுள்ளேன். அங்குள்ள மக்களின்  துக்கத்தில் பங்குகொள்ள சென்றேன். நான் ஆட்சியாளர்களை குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் இங்கே நிர்வாகத்தில் தவறு நடந்துள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தன்மீதான விமர்சனங்களுக்கு பதில் கூறினார் .

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.