ICCWorldCup2023: பெரும் எதிர்பார்ப்பு!! உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு!

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாடி வருகிறது. ஆசிய கோப்பை தொடரை தொடர்ந்து, மிக முக்கிய ஐசிசி தொடரான ஒருநாள் உலக கோப்பை தொடர் இம்முறை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில், அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் எதிர்கொள்கிறது. எனவே, உலக கோப்பை தொடருக்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசியா அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அணித் தேர்வு இருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்திய அணியும் முழுவீச்சில் தன்னை தயார்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஒருபக்கம் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று  வரும் நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு 30 நாட்களுக்கு முன்னதாக அணி வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐசிசி கூறியிருந்தது.

இதனால் இன்று கடைசி நாள் என்பதால், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக்கான 15 கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. உலகக்கோப்பை இந்திய அணியில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், யார் இருப்பார்கள் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்