எஸ்பி வேலுமணிக்கு எதிராக தமிழக அரசு குற்றச்சாட்டு!

தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது. வேலுமணி மீதான வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை நிறைவடைந்து இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

வழக்கை இழுத்தடிற்பதற்காக மேல்முறையீட்டு மனுவை எஸ்பி வேலுமணி தாக்கல் செய்துள்ளார் என்றும் தவறான வழியிலும் சட்டத்திற்கு புறம்பாகவும் எஸ்பி வேலுமணி செயல்பட்டுள்ளார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு குறித்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சியில் ரூ.114 கோடி மதிப்பு ஒப்பந்தம் பணியில் ரூ.29 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களில் ரூ.25 கோடி ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. 2016-20-ஆம் ஆண்டு வரை எஸ்பி வேலுமணி சுமார் ரூ.58 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.  2021-ல் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி வேலுமணிக்கு எதிராக முதல் தகவல் பதிவு செய்யபட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கொரோனா கட்டுப்பாடுகளால் காணொளி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் நேரடி விசாரணை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்