கொரோனாவுக்கு குட்பை…ஃபைசர் மாத்திரைக்கு அனுமதி!

அமெரிக்கா:கொரோனாவை குணப்படுத்த ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தீவிரமாக பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக,கொரோனா தொற்றால் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு,மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில் அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.ஒரு வழியாக கொரோனா பரவல் முடிவுக்கு வரவுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது.

இதனைத் தொடர்ந்து,தற்போது பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது.இது டெல்டா வகை கொரோனா மாறுபாட்டை விட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும்,முந்தைய கொரோனா வைரஸ் தொற்றை விட அதிகவேகமாக பரவி வருகிறது.இதன்காரணமாக, மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்க பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன.குறிப்பாக,பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

அதே சமயம்,அமெரிக்காவில் 1,500 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.எனினும்,தினசரி பாதிப்பு கடுமையான அளவு அதிகரித்து வருகிறது என்றும்,கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருக்கலாம் எனவும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் கணித்துள்ளது.

எனவே,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் 50 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் முன்னதாக தெரிவித்தார். மேலும்,கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில்,கொரோனாவை குணப்படுத்த ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஃபைசர் மாத்திரை வழங்க அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே சிகிச்சை தரும் வகையில், ஃபைசர் மாத்திரை பெரிதும் உதவும் என கூறப்படுகிறது.குறிப்பாக,கொரோனா தொற்று பாதித்து அபாய கட்டத்தில் உள்ள நோயாளிகளை மரணத்திலிருந்து காப்பாற்ற இந்த கொரோனா மாத்திரை உதவும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

எனவே,அமெரிக்கா முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக இந்த மாத்திரையை வழங்க ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.