“பெற்றோர்களே…கட்டணமின்றி புத்தகங்கள்,இலவச பேருந்து வசதி” – முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது.

இந்நிலையில்,குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி எனவும், பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை இனியும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து குறிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது:

“குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள்;குழந்தைப் பருவம் விளையாடி மகிழும் இனிய பருவம்.இவ்வாறு இருக்க,மறுபுறம்குழந்தைப் பருவத்திலேயே அவர்களை வேலைக்குச் செல்லப் பணித்து,சொற்பத் தொகைக்காக அவர்களின் பொன்னான எதிர்காலத்தை பாழ்படுத்தி அவர்களின் குழந்தைத்தனத்தைத் திருடுவது ஒரு தீவிர சமூகக் குற்றமாகும்.மேலும்,குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு உரிமை,கல்வி உரிமை,வாழும் உரிமை ஆகிய உரிமைகளைப் பெற்று திறம்பட உயர்ந்து வாழ்க்கையில் வளம் பெற வேண்டும். அந்த உரிமைகளைப் பறிப்பது இயற்கை நியதிக்கு மட்டுமல்ல,சமூக நீதிக்கும் எதிரானதாகும்.எனவே, குழந்தைகளை எவ்வகைத் தொழிலிலும் ஊதியத்திற்காகப் பணியமர்த்தி,அவர்களின் உழைப்பை உறிஞ்சக் கூடாது என்றும்,அபாயகரமான தொழிலில் வளரிளம் பருவத்தினரை ஈடுபடுத்தக் கூடாது என்றும் உறுதி ஏற்போம்.

மேலும்,குழந்தைகளை படிக்க வைப்பது பெற்றோருக்கு ஒருபோதும் பாரமாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கட்டணமின்றி புத்தகங்கள்,சீருடைகள், பள்ளிக்குச் செல்ல புத்தகப் பை,மதிய உணவில் முட்டையோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவு.கல்விக்கான உபகரணங்கள்,இலவச பேருந்து வசதி என எண்ணற்ற உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

எனவே,பெற்றோர் தங்கள் ‘குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம்’ என்று உறுதி ஏற்க வேண்டும்; மற்றோர், ‘குழந்தைகளைப் பணிக்கு அமர்த்த மாட்டோம்’ என்று தீர்மானிக்க வேண்டும்.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து எங்கேயாவது ஒரு குழந்தை பணிக்கு அமர்த்தப்பட்டாலும்,அரசுக்குத் தகவல் தர வேண்டும்.

புன்னகை பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.இந்த முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!குழந்தைகளைக் கொண்டாடுவோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment