அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

ADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன்  (வயது 97) முதுமை காரணத்தால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் கணக்காளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக, தனி அணியாக உருவாக ஆர்.எம்.வீரப்பன் காரணமாக இருந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவில் பணியாற்றி அமைச்சரவையில் இடம்பிடித்தவர். அதுமட்டுமில்லாமல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற பெரும் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய முதுபெரும் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர்.

நெல்லை மற்றும் காங்கேயம் தொகுதிகளில் இருந்து சட்டப்பேரவை தேர்வு செய்யப்பட்டவர். சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றிய அனுபவமும் உள்ளது. அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அரசில் கல்வி, உணவு, சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

அதேசமயம் 1963-ம் ஆண்டு சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி, கமல், சத்யராஜ் உள்ளிட்டோர் நடத்த படங்களை தயாரித்துள்ளார். இந்த சூழலில் வயது மூப்பு காரணமாக தீவிர அரசியலில் ஒதுங்கி இருந்த ஆர்.எம்.வீரப்பன், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்