“திமுக தலைவர் ஸ்டாலின் சாயம்போன நரி” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு…!

இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெறுகிறது.

எனினும்,ஓரிரு இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக,கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் செங்குறிச்சி பகுதியில் தனி வார்டு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இதனையடுத்து,ராணிப்பேட்டை அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குட்பட்டு திமுக பிரசார நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.மேலும்,வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியில் திமுக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறி இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து,ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி வரை 7.72% வாக்குகள் பதிவாகியதாகவும். 9 மாவட்டங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 12,318 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 129 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு முதற்கட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில்,இன்று ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியலார்களிடம் கூறியதாவது:

“ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஜனநாயக முறைப்படி  நடக்கவில்லை.ஜனநாயக விரோத நடவடிக்கையில் திமுக ஈடுப்பட்டுள்ளது.ஏனெனில்,பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படவில்லை.இது ஜனநாயக நாடு,மன்னராட்சி கிடையாது.

மேலும்,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால்,முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் நிலைமை சாயம் போன நரியாகவும்,காலுடைந்த பரியாகவும்தான் தற்போது உள்ளது.இதனாலயே தேர்தலை சந்திக்காமல் குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றி பெற முயலுகின்றனர்”,என்று கூறியுள்ளார்.