பரபரப்பு…சிறையில் சொகுசு வசதி – சசிகலா உட்பட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபோது சொகுசு வசதிகளைப் பெறச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா,இளவரசி ஆகியோர் மற்றும் லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக கர்நாடகா ஊழல் தடுப்பு படை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் தண்டனைக்காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆகி வெளியே வந்தார். இதனையடுத்து, சிறையில் சொகுசாக இருப்பதற்காக டி.ஜிபி சத்திய நாராயணராவ், சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்  ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அப்போதைய சிறைத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ரூபா அவர்களால் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு சசிகலா,இளவரசி ஆகியோர் முறைகேடாக சிறையில் சிறப்புச் சலுகைகளைப் பெற்றது உண்மைதான் எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்தது.இதனைத் தொடர்ந்து,கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் சசிகலாவின் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கின் அடிப்படையில், நீதிபதி கோவிந்தராஜ் அடங்கிய அமர்வு சசிகலா,இளவரசி வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்,இந்த வழக்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தததையடுத்து,சிறையில் சொகுசு வசதிகளைப் பெறச் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா,இளவரசி மற்றும் லஞ்சம் பெற்ற சிறை அதிகாரிகள் உட்பட 6 பேருக்கு எதிராக கர்நாடகா ஊழல் தடுப்பு படை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.இதனையடுத்து,இந்த வழக்கை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
Castro Murugan