நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் நாளை முதல் மின்சார ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை முதல் மே 20 வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்கள், பிற்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, தேனீர் கடைகள் செயல்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 20ம் தேதி வரை பொதுமக்களுக்கு முழுமையாக அனுமதி இல்லை என்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்றம் மற்றும் ஊடகத்துறையினர் என பல முக்கிய துறைகளை சார்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் நாளை முதல் 50 சதவீத பணியாளர்களுடன் ரயில்வே நிர்வாகம் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ரயிலில் பயணம் செய்ய வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்