#ElectionBreaking: அதிமுக – பாஜக இடையே பேச்சுவார்த்தை தொடரும் – அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை நிறைவு.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக நிர்வாகிகளுடன், மாநில தலைவர் அண்ணாமலை இரு தினங்களாக சென்னை கமலாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்க அதிமுக மறுத்து வருவதாகவும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையே சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக இழுபறி நீடித்து வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக சென்னை அதிமுக அலுவலகத்தில் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.

அதிமுக – பாஜக இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது. பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம். அதிமுக-பாஜக கூட்டணி, இடப் பங்கீட்டில் சிக்கல் இல்லை என்றும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடருவோம் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், முரசொலியில் ஆளுநரைப் பற்றி அவதூறாக எழுதப்பட்டுள்ளது. அவர் பல மேடைகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடைப் பாராட்டியிருக்கிறார். அப்படி இருக்க ஆளுநர் பற்றி அவதூறாக பேசுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?  என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்