கண்டுபிடிப்பு சாதனை – சென்னை ஐஐடி தரவரிசையில் மீண்டும் முதலிடம்.!

புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.க்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு நிதி அளிக்கும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளின் படி, கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் (ஏஆர்ஐஐஏ) வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த ஐஐடி சென்னை இந்த ஆண்டும் முதலிடத்தை 2வது முறையாக பிடித்து சாதனை படைத்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி 2ம் இடமும், டெல்லி ஐ.ஐ.டி மூன்றாம் இடமும் பெற்றுள்ளன. சமீபத்தில் என்.ஐ.ஆர்.எப் என்கிற உயர்கல்விக்கான தேசிய தர வரிசையிலும் சென்னை ஐஐடி முதல் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாநில அரசின் நிதி பெறும் தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில் புனேவின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முதலிடத்தையும், கர்நாடகா பிஇஎஸ் பொறியியல் கல்லூரி 2ம் இடத்தையும், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 3ம் இடத்தையும் பெற்றுள்ளன. தனியார் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்