கொரோனா மரணம்…இவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை:கொரோனா தடுப்பு பணியின் போது,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் 2 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெ.மௌனதாஸ் மற்றும் கு.இராஜேந்திரன் ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து,நிவாரண உதவியாக தலா ரூ.25 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

“அரசுத் துறைகளான மருத்துவத் துறை,காவல்துறை,உள்ளாட்சித் துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி,கொரோனா தடுப்புப் பணியின் போது உயிரிழக்கும் முன்கள் அரசுப் பணியாளர்கள்,உள்ளாட்சி அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குவதற்கான வரையரைகள் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில்,மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த திருவாளர்கள். ஜெ.மௌனதாஸ், தூய்மை காவலர்,வில்லியவரம்பல் ஊராட்சி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்,தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கு.இராஜேந்திரன், தூய்மைக் காவலர், மகாராஜபுரம் ஊராட்சி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்,விருதுநகர் மாவட்டம் ஆகிய இரண்டு தூய்மை காவலர்களின் குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி பெற்று தருவதற்கு தஞ்சாவூர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்தது. உரிய பரிசீலனைக்குப் பின் கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த கீழ்க்காணும் இரண்டு தூய்மை காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவியாக தலா ரூ.25,00,000/- (ரூபாய் இருபத்தைந்து இலட்சம் மட்டும்) வீதம் மொத்தம் ரூ.50,00,000/- (ரூபாய் ஐம்பது இலட்சம் மட்டும்) நிதியுதவி ஒப்பளிப்பு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.