தொடர் மருத்துவ சிகிச்சை… இன்றாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் விசாரணை…

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காவிரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் (இருதய) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்பின் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவ்வப்போது உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கும் சென்று வந்தார்.  இதனிடையே, உடல்நலனை காரணம் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு ஜாமீன் மனுவையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அப்போதும் ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதனால், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதே சமயத்தில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலும் 10வது முறையாக நீட்டிக்கப்பட்டது. இதனால், செந்தில் பாலாஜி தொடர்ந்து புழல் சிறையிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

40 படகுகள் எரிந்து நாசம்… கொழுந்துவிட்டு எரிந்த விசாகப்பட்டினம் துறைமுகம்.!

அப்போது, அவருக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதயம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என டாக்டர் பரிந்துரைத்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாகவும், நரம்பியல் மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நெஞ்சகவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பிலுள்ள ரத்த கட்டியை கரைக்க மருந்துகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், கழுத்து பின் பகுதி சவ்வில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபோன்று, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஜாமீன் கோரி தொடர்ந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஸ் சந்திர சர்மா அமர்வில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, சென்னனை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்குமா? அல்லது மறுக்கப்படுமா என எதிர்பார்க்கபடுகிறது. இந்த சூழலில், செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்