பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர்!

சென்னை:கொரோனாவை தடுக்கும் வகையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி, தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் இதுவரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாடு முழுவதும் முதற்கட்டமாக இன்று முன்களப்பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்கள்,இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.குறிப்பாக,தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்ட பணியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இமேஜ் கலையரங்கில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி,இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்.மேலும்,முதல் மற்றும் 2 ஆம் தவணையின்போது எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ,அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக 3 வது முறை செலுத்தப்படும்.

அந்த வகையில் இன்று 4 லட்சம் பேருக்கு 3 வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.