#Breaking:பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதற்கு 10 லட்சம் நிதி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அருகே இன்று பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. இதில், அரக்கோணத்தை சேர்ந்த பெண் காவலர் கவிதா உயிரிழந்துள்ளார்.

மேலும், பெரியமரம் சாய்ந்து விழுந்ததில் ஒரு போக்குவரத்து காவலர் காயமடைந்த நிலையில், 2 கார்கள் சேதமடைந்துள்ளன.இதனையடுத்து, அங்கு மரத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில், பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதற்கு,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும்,அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“இன்று (2:11.2021) காலை சுமார் 9.00 மணியளவில் தலைமைச் செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது, அங்கே காவல் பணியிலிருந்த முத்தயால்பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் திருமதி கவிதா அவர்கள் மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைந்தேன் பணியிலிருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் திருமதி.கவிதா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த திருமதி.கவிதா அவர்களின், குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்”,என்று தெரிவித்துள்ளார்.