காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு.

கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர்.

இதுகுறித்து அம்மாநில கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் (LDF) மற்றும் காங்கிரஸ் கூட்டணி (UDF) வேட்பாளர்களின் முகவர்கள் புகார் அளித்தனர். இதன்பின் இன்று மின்னணு வாக்கு இயந்திரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது இந்த காசர்கோடு விவகாரம் குறித்து மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து காசர்கோடு விவகாரத்தை உடனடியாக விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இவிஎம் இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கூறியதாவது, கேரள மாநிலம் காசர்கோட்டில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை, அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்