#Breaking:ஸ்லைடிங் நம்பர் பிளேட்;ஒரு வருடம் சிறை – போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை!

சென்னையில் உள்ள சாலைகளில் பைக் சாகசம் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்களை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில்,சென்னையில் காவல் துறையிடமிருந்து தப்பிக்க நம்பர் பிளேட்டை மறைத்து பைக் ஓட்டி வந்த 100 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும்,அவர்களுக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்ற அண்ணா சாலை மற்றும் ஆலந்தூர் பகுதியில் உள்ள ஸ்டிக்கர் கடை உரிமையாளர்கள் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல்,மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

மேலும்,கடை உரிமையாளர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.