#BREAKING: மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை – பள்ளிக்கல்வித்துறை

மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மத தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.

அரியலூா் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவைச் சோ்ந்த 17 வயது மாணவி, இவா் தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த படித்து வந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற  சொல்லி வற்புறுத்தியதால், அவா் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது. ஒருபுறம் தமிழக பாஜக தரப்பில் இருந்து பேசும்போது, மதமாற்றம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் எதுவும் இல்லை என பள்ளி மற்றும் பிற மாணவர்களிடம் விசாரணை நடத்திய பின்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்பட 16 பேர் பள்ளியில் நேரடியாக பார்வையிட்டனர்.

அந்த அறிக்கையில், அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மத தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை. பள்ளியில் பயின்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பாக புகார்கள் இதுவரை பெறப்படவில்லை. முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் சார்பான புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. தொடர் விடுமுறைகளின் போது மற்ற மாணவிகள் சொந்த ஊருக்கு செல்லும்போதும், சம்மந்தப்பட்ட மாணவி விடுதியிலேயே இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

மதரீதியான பிரச்சாரங்கள் தலைமை ஆசிரியர்களாலோ, மற்ற ஆசிரியர்களாலோ செய்யப்படவில்லை. குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் கல்வி பயில்கின்றன. பள்ளியில் பயிலும் மாணவர்களில் இந்துக்கள் 5,200, கிறிஸ்துவர்கள் 2,290, இஸ்லாமியர்கள் 179 பேர் பயின்று வருகின்றனர்.

தொடர் விடுமுறையின்போது சம்மந்தப்பட்ட மாணவி கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார். பள்ளி சேர்க்கை பதிவேட்டு, சேர்க்கை விண்ணப்பம், 7-ஆம் வகுப்பு மாற்றுச்சான்றிதழில் பெற்றோர் கையொப்பத்தில் சரண்யா என உள்ளது. ஜனவரி 10-ஆம் தேதி உடல்நலக்குறைவால், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவி சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.  எனவே பள்ளி மாணவர்களிடம் மதரீதியான பரப்புரைகளில் தலைமை ஆசிரியரோ, பிற ஆசிரியர்களோ ஈடுபடவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்