#Breaking:அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநிலங்களுடன் மத்திய அரசு அவசர ஆலோசனை!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த வகையில்,கடந்த சில நாட்களாக தமிழகம்,மகாராஷ்டிரா,கேரளா,தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.இந்த மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில்,நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டார்.அதன்படி,காணொளி மூலமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

குறிப்பாக,இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்,தடுப்பூசி பணியை விரைவுப்படுத்தல் குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டதில் பேசிய முதல்வர்:”கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல்,தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என முதல்வர் அறிவுறுத்தினார்.மேலும்,போதிய பரிசோதனைகள்,தொடர்  கண்காணிப்பு, சிகிச்சை,தடுப்பூசி ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்,திருமணம்,திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்சிகளில் கலந்து கொள்வோருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

அதே சமயம்,தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment