#Breaking:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான் – அப்பல்லோ மருத்துவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில்,நேற்று முதல் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த விசாரணையின்போது மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்தார்.

குறிப்பாக,தனக்கு தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்கும் நாளுக்கு முன் ஜெயலலிதாவுக்கு தலை சுற்றல், மயக்கம் இருந்தது. அப்போது, சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு உடற்பயிற்சியை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன் எனவும் அப்போலோ மருத்துவர் கூறினார். சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்க ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தேன் என்றும் விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாபு மனோகர் நேற்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

மேலும், மருத்துவர் சிவகுமார் அழைத்ததின்பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் சென்னை போயஸ் கார்டன் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்தித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார். யாருடைய துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்ததாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் முக்கிய தகவல்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த டிசம்பர் 2016 ஆம் தேதி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை ஏற்பட்டது மாரடைப்புதான் என்று அப்பல்லோ மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகினார்.

அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில்,ஜெயலலிதா அவர்களுக்கு  மாரடைப்புதான் ஏற்பட்டது என்றும்,உடனே அவருக்கு தேவையான மருத்துவ முறைகள் அனைத்தையும் தாங்கள் முறையாக பின்பற்றியதாகவும் அப்பல்லோ மருத்துவர் கூறியுள்ளார்.