“நீட் தேர்வு குழுவுக்கு எதிரான பாஜக வழக்கு….விளம்பரத்திற்கானது;ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சிக்கானது” – தமிழக அரசு ….!

நீட் தேர்வு குழுவுக்கு எதிரான பாஜக வழக்கு,ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடைந்துள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய,ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட ஒரு குழுவை தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து,தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ,மாநில அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில்,நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில்,”அரசு பள்ளி மாணவர்களுக்கும்,தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என ஆய்வு செய்யவே நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இதில் எந்த அரசியல் சாசனமும் மீறப்படவில்லை.மாநில அதிகாரத்திற்கு உட்பட்டுதான் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால்,மனுதாரர் மாணவரோ? அல்லது பெற்றோரோ? கிடையாது. குறிப்பாக இவர் ஒரு அரசியல் கட்சி நிர்வாகியாக இருக்கையில் எதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர முடியும்.எனவே, விளம்பரத்திற்காகவும் ,யூகத்தின் அடிப்படையிலும் பாஜக தொடர்ந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி.”,என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,இந்த வழக்கானது வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே,பாஜக தொடர்ந்த வழக்கை எதிர்த்து மாணவி ஒருவர் மற்றும் திராவிட கழக தலைவர் வீரமணி அவர்கள் இடைமனுதாரர்களாக மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.