தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்… ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!

சண்டிகரில் மேயர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை நடைபெற்றது. இதில், பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்கின. அதன்படி, 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், பாஜக 16 வாக்குகளையும், இந்தியா கூட்டணி 12 வாக்குகளையும் பெற்றன.

இதில், 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமாரை தோற்கடித்து பாஜகவின் மனோஜ் சோங்கர் இந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார். சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவின் மனோஜ் சோங்கர் வெற்றி பெற்றதையடுத்து, அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்களை, பாஜக ஏமாற்றியதாகவும், உரிய தேர்தல் நடைமுறையை பின்பற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, சண்டிகர் மேயர் தேர்தல் வெற்றி பெறுவதற்காகவே பாஜக கீழ்த்தரமாக செயல்பட்டுள்ளது. மேயர் தேர்தலிலேயே இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக, வரும் பொதுத்தேர்தலில் எந்த கீழ்நிலைக்கு செல்லும்.

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி.. 8 வாக்குகள் செல்லாது என அறிவிப்பு.!

பட்டப்பகலில் அப்பட்டமான மோசடியில் பாஜக ஈடுபட்டுள்ளதாகவும், பாஜகவின் செயல் கவலை அளிப்பதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டினார். இதனைத்தொடர்ந்து, தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, இது ஒரு கூட்டணிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ ஏற்பட்ட பின்னடைவு அல்ல. இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு. மேயர் தேர்தல் முடிவு குறித்து நாங்கள் வேதனையடைந்தோம்.

வரவிருக்கும் 2024 தேர்தலில் என்ன நடக்குமோ என்று நாங்கள் கவலைகொள்கிறோம். பாஜகவால் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு, சட்டவிரோத செயல்களைச் செய்ய முடிந்தால் தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம். எனவே, மேயர் தேர்தல் நடத்திய தலைமை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் கைது செய்யப்பட வேண்டும், அவர் தேச துரோகத்தில் ஈடுபட்டுள்ளார். எங்கள் புகார் மீது விசாரணை மட்டும் நடத்தாமல், கைது செய்ய வேண்டும் என்றார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment