காஞ்சிபுரத்தில் இருந்து அமெரிக்கா சென்ற சிலை …அமெரிக்காவில் உள்ள ஏசியன் அருங்காட்சியகத்தில் விற்பனை?

அமெரிக்காவில் உள்ள ஏசியன் அருங்காட்சியகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்ட தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை  விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. சிதிலம் அடைந்துவிட்டதாக கூறப்பட்ட சிலை அழகுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, 1509 ம் ஆண்டு, விஜய நகர பேரரசு மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், சுமார் 10 சிலைகள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியதாக வரலாற்று ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணதேவராயர் காலத்தில் வழங்கப்பட்ட பழமையும் தொன்மையும் வாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அதன் தொடர்புடைய சிலைகள் சிதிலம் அடைந்து விட்டதாக கூறி , அதற்கு பதிலாக தலைமை ஸ்தபதி முத்தையாவின் அறிவுறுத்தலின் பேரில் போலியான சிலைகளை செய்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வழிபாட்டிற்கு வைத்து பக்தர்களை ஏமாற்றிவருவதாக புகார் எழுந்தது.

புகாரை விசாரித்த ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு அதிகாரிகள் , தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் அவர் நீதிமன்றத்தின் முன் ஜாமீன் பெற்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். தன் மீது குற்றம் ஏதும் இல்லை என்பது போலவும் சிதிலம் அடைந்த தொன்மையான சிலைகள் இந்துசமய அற நிலையத்திடமே உள்ளதாகவும் முத்தையா தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏகாம்பர நாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தொன்மையான சோமாஸ் கந்தர் சிலைகள் அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஆசியான் ஆர்ட் காலரி மியூசியத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

எந்த ஒரு சிதிலம் இல்லாமல் அதே தொன்மையுடன் காட்சியளிக்கும், அங்குள்ள சோமாஸ்கந்தர் சிலைகளின் பீடத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட காலம் குறித்த தகவல்கள் தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு மன்னர்களின் ஆட்சி காலத்தில் ஏகாம்பர நாதர் கோவிலுக்கு வழங்கப்பட்ட, வைரம், வைடூரியம், பவளம், மாணிக்கம் பதித்த நகைகளும், இரட்டை திருமாளிகையின் அருகேயுள்ள சன்னதியிலிருந்து கடத்தப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட கற்சிலைகளும் வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலின் கண்காணிப்பு காமிராக்களை அகற்றிவிட்டு, கோவில் நிர்வாக அலுவலர்கள், நகைகளையும், சிலைகளையும், புதிய சிலைகள் மற்றும் கலைபொருட்கள் என்ற அடிப்படையில் போலியான ஆவணங்களை தயாரித்து அமெரிக்காவுக்கு கடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஆசியான் ஆர்ட் காலரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தமிழக சிலைகளை மீட்கவும், கடத்த உதவியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்வும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment