#AsiaCup2022: ஆசிய கோப்பை – முதல் போட்டியிலேயே இன்று இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்!

ஆசிய உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்தியா Vs பாகிஸ்தான் மோதல்.

11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்தாவில் இன்று கோலகமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் 1-ஆம் வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, 4 முறை சாம்பியனான தென்கொரியா, ஓமன், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் விளையாடும் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்றும் லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனான பிரேந்தர் லக்ரா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் போட்டி இன்று மாலை 5 மணியளவில் தொடங்கவுள்ளது. இந்திய அணியில் மூத்த வீரர்கள் பலர் இடம்பெறாத நிலையில், இளம் வீரர்கள் மிகுந்த அணி களமிறங்கவுள்ளது. பிரேந்தர் லக்ரா தலைமையிலான இந்திய அணியில், மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்தி ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த சனிக்கிழமை நடந்த பயிற்சி போட்டியில் பங்களாதேஷை, இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு பயிற்சி போட்டியில் கொரியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. கடைசியாக 2017-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஹாக்கி ஆசிய கோப்பையை இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தலா மூன்று முறை வென்றுள்ளனர். இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரை 177 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

இதில் பாகிஸ்தான் 82 போட்டிகளிலும், இந்தியா 64 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் கடைசியாக மோதிய 13 போட்டிகளில் 12ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் பதக்கம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று தொடங்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்திலேயே இந்தியா, பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment