டெல்லிக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகிக்க ரஷ்ய நிறுவனம் ஒப்புதல்-அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி அரசிற்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய ரஷ்ய தடுப்பூசி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர். கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மத்திய அரசே மாநிலங்களுக்கு வழங்கி வந்தது.அதன் பின்னர்  மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இதன் காரணத்தால், பல்வேறு மாநிலங்கள் முதலில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசியின் நிறுவனங்களை அணுகியது. ஆனால் இவ்விரு அமெரிக்க நிறுவனங்களும் தாங்கள் நேரடியாக நாட்டின் மத்திய அரசிடம் மட்டுமே வழங்குவோம் என்று கைவிரித்துவிட்டது.

இதனை அடுத்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரஷ்ய நிறுவனமான ஸ்புட்னிக் வி நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு, ஸ்புட்னிக் வி நிறுவனம் டெல்லி அரசிற்கு தடுப்பூசி விநியோகிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எத்தனை தடுப்பூசிகள் வழங்கும் என்ற அளவுகள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல் திறன் 91.6 ஆகும்.