எங்களுக்கு பானை தான் வேண்டும்… அடம்பிடிக்கும் விசிக.!

Election2024 : தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விசிக மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனின் விசிக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலை போலவே சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் விசிக போட்டியிடுகிறது. கடந்த முறை விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியன் (திமுக) சின்னத்திலும், சிதம்பரத்தில் திருமாவளவன் விசிக சின்னமான பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த முறை இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடபோவதாக விசிக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, பானை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை விசிக அணுகி இருந்தது. இந்த கோரிக்கையில் பதில் கூறியிருந்த தேர்தல் ஆணையம், பானை சின்னத்தை விசிகவுக்கு ஒதுக்க முடியாது என கூறியிருந்தது. கடந்த தேர்தலில் 1 சதவீதம் கூட வாக்கு வாங்கவில்லை (தமிழகம் முழுவதும்). 3 ஆண்டுகளாக கட்சி கணக்கு வழக்குகளை ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் கூறியிருந்தது.

இதனை அடுத்து, மீண்டும் தேர்தல் ஆணையத்தை விசிக அணுகியுள்ளது. கடந்த கால சட்டமன்ற தேர்தல்களில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 1.16 சதவீத வாக்குகள் மேலே பெற்றுள்ளோம். கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பானை சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றோம். அதற்கான வாக்கு விகிதம் கணக்கிடப்படவில்லை. இந்த முறை தமிழகம் , கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா என 5 மாநிலத்தில் தேர்தலில் விசிக போட்டியிடுகிறது என பல்வேறு கோரிக்கைகளை கூறி பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என விசிக, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.