“அம்மா மினி கிளினிக்….திமுக அரசின் குறி” – டிடிவி தினகரன் கண்டனம்!

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது.

போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது,ஓராண்டு அடிப்படையில் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும்,புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

கடந்த ஆட்சியில் அவசர கதியில் சரியான ஏற்பாடுகளின்றி அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டபோதே அவற்றிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

அந்த கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக் கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்?.

புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது.அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து,ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது”,என்று பதிவிட்டுள்ளார்.