விபச்சாரக் கும்பல் தன்னை அணுகியது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டார் அமலா பால்!

நடிகை அமலாபால் பிரைவேட் பார்ட்டிக்கு தன்னை அணுகிய விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வெளியிட வேண்டும் என நடிகை அமலாபால் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகையான அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய நிகழ்ச்சிக்காக, சென்னை தியாகராயர் நகர் பகுதியில் உள்ள தனியார் நடன பள்ளி ஒன்றில் ஜனவரி 31ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அப்போது தன்னை அணுகிய நபர், மலேசிய நிகழ்ச்சிக்குப் பிறகு பிரைவேட் பார்ட்டி ஒன்று இருப்பதாகவும், அதில் தம்மை கலந்துகொள்ளுமாறு அந்த நபர் கேட்டதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

“அது என்ன பிரைவேட் பார்ட்டி” என தாம் கேட்டபோது, ஒன்றும் தெரியாத குழந்தை போல பேச வேண்டாம் என அந்த நபர் கூறியதாகவும், இந்த அசிங்கமான உரையாடலின்போது தன்னைச்சுற்றி யாரும் இல்லாததால் உதவிக்கு ஆட்களை அழைத்ததாகவும் அமலாபால் கூறியுள்ளார். தனது நலன் விரும்பிகளும், பணியாளர்களும் வருவதற்கு அரை மணி நேரம் வரை ஆனதாகவும், தன்னிடமிருந்து சாதகமான பதில் வரும் என அதுவரை அந்த நபர் அங்கேயே காத்திருந்ததாகவும் அமலாபால் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்கள் வந்து அந்த நபரை பிடித்தவுடன், விருப்பமில்லை என்றால் முடியாது என கூறிவிட வேண்டியதுதானே அதை ஏன் பெரிதாக்க வேண்டும் என அந்த நபர் கூறியதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார். இதன் பிறகே அந்த நபர் விபச்சாரக் கும்பலை சேர்ந்தவன் என்பதை தாம் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமல்லாது மலேசிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகளின் விவரங்களையும் அந்த நபர் செல்பேசியில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அமலாபால் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, விபச்சாரக் கும்பலின் செயல்பாடுகளுக்கான ஆதாரங்களை கண்டுபிடித்ததுடன், அதில் தொடர்புடைய 2 முக்கிய நபர்களை கைது செய்ததற்கு போலீசாருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமலாபால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ள அமலாபால், இருப்பினும் இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என்றும், விபச்சாரக் கும்பல் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தன்னைப் பற்றியும், தனது மேலாளரை பற்றியும் சில ஊடகங்கள் அடிப்படை ஆதாரமின்றி அவதூறாக செய்தி பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய தாம் தயங்கப்போவதில்லை எனவும் அமலாபால் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment