கூட்டணி உறுதி..? தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை.., தினகரன் அறிவிப்பு ..!

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காத நிலையில், கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அன்றைய தினமே தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்கள் தனித்து போட்டிட தயாராக உள்ளோம். ஆனால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருத்து கேட்கவேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர், 140 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை தயார் செய்து நேற்று வெளியிட இருந்த நிலையில், 140  வேட்பாளர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தேர்தலில் தனித்து போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். நீங்கள் தயாராக உள்ளீர்களா..? எனவும் திடீரென கூட்டணி அமைத்தால் உங்கள் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுப்பீர்களா..? என போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

அப்போது, 140 வேட்பாளர்களில் பலர் தனித்து போட்டியிட தயாராக இல்லை; கூட்டணி அமைத்தால் நல்லது என கருத்து தெரிவித்தனர். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக விலகிய அன்றே அமமுக சார்ந்த ஒருவர் மறைமுகமாக தேமுதிக உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அதிமுகவை வீழ்த்த இருவரும் கூட்டணி அமைக்கலாம் என பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மையா ..? என கேள்வி எழுப்பியதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான். எப்போது வேண்டுமானாலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தெரிவித்தார்.

கூட்டணி உடன் சேர அதிக வாய்ப்பு உள்ளதா..? என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு சேருவதற்காக தான் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார். இதனிடையே, ஒருபக்கம் தேமுதிகவிற்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. மறுபக்கம் அமமுக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தேமுதிகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

author avatar
murugan