தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த டிச.1 ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி,

  • நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் திமுக-வின் நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக் கண்டனம்.
  • ஏழை, எளிய உழைக்கும் மக்கள்; பெண்கள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்த வாக்குறுதிகளை உறுதியாய் நிறைவேற்றுவதாகக் கூறிய தி.மு.க. அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவும், அந்த வாக்குறுதிகள் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வற்புறுத்தியும்; அவ்வாறு தெரிவிக்காவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை.
  • தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச் செயல்கள்;கொலை, கொள்ளைகள்; வழிப்பறி சம்பவங்கள்;போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள் மீதான தாக்குதல்கள்; பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க. அரசு முன்வர வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
  • வடகிழக்குப் பருவ மழையால் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதன் காரணமாகவும்; வாழை, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பிற பயிர் வகைகளும் பெருமளவு பாதிப்படைந்துள்ளதன் காரணமாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்; மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட திமுக அரசை வலியுறுத்தல்;மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய திமுக அரசுக்குக் கண்டனம்.
  • மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர் துடைக்க திமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து,மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து,அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கடந்த 11.12.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுடைய மறைவையொட்டி,இன்று காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதற்கிடையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும்,பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, காய்கறிகள் விலை உயர்வு, கனிகள் விலை உயர்வு,மீன்களின் விலை உயர்வு போன்றவற்றால் விரக்தியில் உள்ள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும், இல்லையெனில், வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர், ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில்,விலை உயர்வு,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படும் வருமான வரி சோதனை போன்றவற்றிற்காக திமுக அரசைக் கண்டிப்பதாக கூறி தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.அதன்படி,இன்று காலை 10 மணிக்கு அதிமுக கட்சியின் நிர்வாக ரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

குறிப்பாக,சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதே சமயம்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் அவர்களது சொந்த மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.