ராஜீவ் காந்திக்கும், அவருடன் மரணித்த 17 பேருக்கும் தயார் இருக்கின்றனர் – கே.எஸ்.அழகிரி

ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா? என கே.எஸ்.அழகிரி கேள்வி.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் ஏந்தி அறப்போராட்டம் நடத்துமாறும் கேட்டுகொண்டியிருந்தார். அதன்படி,  பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டி, பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோன்று, மதுரையில் தமுக்கம் மைதானம் நேரு சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக முழுவதும் பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த அறப்போராட்டத்தில் தலைமை வகித்தார்.

அப்போது, வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதன்பின் பேசிய அவர், தமிழன், அதனால் விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனுக்கு ஆதரவாக குரலெழுப்புபவர்கள் கூறுகின்றனர். ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா?, பேரறிவாளனின் தாயார் நீண்ட சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

அற்புதம்மாளின் மனநிலையை நான் அறிவேன், அதேபோல ராஜீவ் காந்திக்கும், அவருடன் மரணித்த 17 பேருக்கும் தயார் இருக்கின்றனர். அவர்களுடைய மனநிலையை யார் அறிவார்கள்?, கன்றுக் குட்டியை கொன்றான் என்பதற்காக தன்னுடைய மகனுக்கே தண்டனை அளித்த தமிழ் மன்னன்தான் மனுநீதி சோழன், தமிழ்நாட்டின் சரித்திரம் அப்படிதான் இருந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment