மரம் விழுந்து இருவர் உயிரிழப்பு – நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு,  தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் வரை தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கப் பணிக்காக சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் பொழுது ஜேசிபி இயந்திரத்தின் உதவியைக் கொண்டு மரத்தினை அகற்றினர்.

அந்த மரம் சரியாக அகற்றப்படாமல் சாலை நடுவே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்துள்ளது. இந்த நிகழ்வின்போது ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த ரஹ்மத் பீவி என்ற பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு,  தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பை உறுதி செய்து, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.