நிதி அயோகின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் 31 : வேலைவாய்ப்பு

வேலை வாய்ப்பு தொடர்பாக நிதிஆயோக் தனது இறுதி அறிக்கையை இம்மாதம் 31-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. நிதி ஆயோக் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து இம்மாத இறுதியில் விடைபெறும் அர்விந்த் பனகாரியா இந்த அறிக்கையை அரசுக்கு அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நிபுணரான அர்விந்த் பனகாரியா 2015-ம்ஆண்டு ஜனவரி மாதம் நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். மீண்டும் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இம்மாதம் 31-ம் தேதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
வேலை வாய்ப்பு தொடர்பான வரைவு அறிக்கை ஜூலை 13-ம் தேதி வெளியானது. அடிக்கடி நிகழ்த்தப்பட்ட புள்ளி விவர தகவல் மற்றும் ஜிஎஸ்டிஎன் தகவல் தொகுப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு குறித்த துல்லியமான விவர அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.
முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையில் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன. உரிய காலத்தில் நம்பகமான வேலை வாய்ப்பு குறித்த தகவல்கள், நாட்டில் வேலை இல்லாதவர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்கான வழி வகைகள் இதில் கூறப்பட்டிருந்தன.இந்த வரைவு அறிக்கை தொடர்பாக ஜூலை 23-வரை பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டிருந்தன.
நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் தொடர்பாக உரிய தகவலை அளிக்குமாறு கடந்த ஜூன் மாதம் ஒரு குழுவை பிரதமர் அலுவலகம் நியமித்தது. அத்துடன் இதற்கு தீர்வுகளை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டது. இதனடிப்படையில் அரசு உரிய கொள்கைகளை வகுக்கத் திட்டமிட்டுள்ளது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment