கடனை திருப்பி செலுத்தாத 40 நிறுவனங்கள் பட்டியல்: ரிசர்வ் வங்கி வெளியீடு

கடனை திருப்பி செலுத்தாத 40 நிறுவனங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிக்க நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு பரிந்துரை செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள இந்த இரண்டாவது பட்டியலில் வீடியோகான், ஜேபி அசோசியேட்ஸ், ஐவிஆர்சிஎல், விசா ஸ்டீல் மற்றும் உத்தம் கால்வா நிறுவனங்கள் உள்ளன.
காஸ் டெக்ஸ், ஜெய்ஸ்வால்,நெகோ, ருச்சி சோயா, நாகர்ஜூனா ஆயில் மற்றும் ஆர்கிட் கெமிக்கல்ஸ், ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி, எஸ்இஎல் மேனுபேக்சரிங், சோமா எண்டர்பிரைஸஸ், ஏசியன் கலர்ஸ், இஸ்பட் கோட்டட் , யுனிட்டி இன்பிரா புராஜெக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.திவால் சட்டப்படி இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.மொத்த கடனாளிகள் சுமார் 35 முதல் 40 கணக்குகள் இருக்கலாம் என்றும், இதில் எஸ்பிஐ வங்கியில் மட்டும் 25 முதல் 26 கணக்குகள் உள்ளன என்றும் தகவல் தெரிவிக்கிறது.
இந்த தகவலுக்குப் பின்னர் நேற்றைய பங்கு வர்த்தகத்தில் விசா ஸ்டீல் பங்குகள் 1.24 சதவீதம் வரை சரிந்தது. வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.50 சதவீதம் சரிந்து ரூ.18.10க்கு வர்த்தகம் முடிந்துள்ளது. உத்தம் கால்வா பங்குகள் 2.35 சதவீதம் வரை சரிந்தது.
கடந்த ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் பட்டியலில், அதிக வாராக்கடன் வைத்துள்ள 12 நிறுவனங்கள் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் நடவடிக்கைகள் எடுக்கவும் பரிந்துரை செய்தது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.5,000 கோடிக்கு மேல் கடன் நிலுவை வைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக ரூ.1,75,000 கோடி வாராக்கடன் இந்த நிறுவனங்கள் வைத்துள்ளன. வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடனில் இந்த 12 நிறுவனங்கள் மட்டும் 25 சதவீதம் வாராக்கடனை வைத்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment