இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு- ஷாஹித் அப்ரிடி

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு 65% வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் நாளை அடிலெய்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் சம பலத்துடன் தான் இருக்கிறது, இந்த உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் சிறப்பாகவே விளையாடி இருக்கிறது. இருந்தாலும் இந்தியாவை விட இங்கிலாந்தின் பேட்டிங், பௌலிங் சிறப்பாக இருக்கிறது. என்னுடைய அபிப்ராயத்தில் இங்கிலாந்தின் கை ஓங்கி இருப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய டி-20 உலகக்கோப்பை தொடரில் என்னதான் நம்முடைய கருத்தைக் கூறினாலும், ஆட்டத்தில் எந்த அணி 100% பங்களிப்பு மற்றும் குறைவான தவறுகளை செய்கிறார்களோ அந்த அணியே வெற்றிபெறும் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். பௌலிங்கில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

இங்கிலாந்து அணியில் காயத்தில் இருந்து குணமடையாததால் டேவிட் மலான் நாளைய போட்டியில் விளையாடுவது உறுதியில்லை, மேலும் மார்க் வுட்டும் காயம் காரணமாக பயிற்சியில் பங்குபெறவில்லை இதனால் அவரும் நாளை விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment