சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 3 நோயாளிகள் உயிரிழப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. நேற்று மட்டும் அங்கு 7,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினசரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் நிரம்பிவிட்டன. அங்கு படுக்கைகள் கிடைக்காததால் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. நோயாளிகளுடன் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாசலில் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 3 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்சிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்த நிலையில், படுக்கைகள் இல்லாத நிலையில் உயிரிழந்ததாகவும், தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்