திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!!வரும் 28-ம் தேதி நடக்கும்-கொறடா அர.சக்கரபாணி அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 28-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.துறை வாரியாக மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 9-ம் தேதி வரை 23 நாட்கள் நடக்க உள்ளது. பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் இதில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் வரும் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடக்க உள்ள இந்தக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று சட்டப்பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி நேற்று வெளியிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப் பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.இத்தகைய சூழலில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் இப்பிரச்சினைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என்று தெரிகிறது.
பேரவைக் கூட்டத்தில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்க உள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மட்டுமல்லாது காவிரி பிரச்சினை, நீட் தேர்வு, நியூட்ரினோ, குடிநீர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை பேரவையில் எழுப்பி, அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment