“சின்னக் கலைவாணர் விவேக் சாலை” – பெயர் பலகையை திறந்து வைத்த அமைச்சர்!

சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார் மருத்துவத்துறை அமைச்சர். 

பிரபல நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17ல் மாரடைப்பால் காலமானார். கோவில்பட்டியில் பிறந்த விவேக், சென்னை, தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றியவர். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படம் மூல தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தது மட்டுமின்றி, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சினிமா துறையில் மட்டுமல்லாது, சமுதாய ரீதியான சில விஷயங்களிலும் ஈடுபாடுடன் செயல்பட்டு வந்தார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் ஆலோசனையை ஏற்று, ஒரு கோடி மரக்கன்றுகளை நட உறுதியேற்று செயலாற்றி வந்தார். நடிகர் விவேக்கின் மரணம், தமிழகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மறைந்த நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  இந்த சமயத்தில், சமீபத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள சாலைக்கு, விவேக்கின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து, சென்னை கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டில், நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையான விருகம்பாக்கம், பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு, ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிட்டு நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு கவுரவம் அளித்தது. இந்த நிலையில், நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலையை “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெயர் பலகையை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்