ஐயப்பன் கோவிலில் போலீஸ் கெடுபிடி…பக்தர்கள் கூட்டம் குறைந்தது….!!

போலீஸ் கெடுபிடியால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு பின்னர் இருமுறை கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அவர்கள் செல்ல முடியவில்லை. இந்நிலையில் கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
வழிபாட்டுக்காக 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும். இதையொட்டி போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. மண்டல பூஜை, மகரவிளக்கையொட்டி நடை திறக்கப்பட்டுள்ள சபரிமலையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அலைமோதும். போலீஸ் கெடுபிடி உள்ளிட்ட பிரச்சினைகளால், விடுமுறை நாளான இன்று கோவிலுக்கு குறைவான பக்தர்களே வருகை தந்தனர். அதனால் கோவில் வளாகம் வெறிச்சோடியது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ள கேரள அரசு சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தடுக்க ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சபரிமலை நோக்கி சென்ற மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் சுரேந்திரனை போலீசார் கைது செய்து கொட்டாரக்காரா கிளைச் சிறையில் காலை அடைத்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய சுரேந்திரன், போலீசார் தன்னைத் தாக்கியதாகவும், குடிநீர், உணவு, மருந்து எதையும் தரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.சுரேந்திரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் முக்கிய நகரங்களில் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கரகோ‌ஷம் எழுப்பியவாறு சாமியே சரணம் அய்யப்பா என்றும் முழக்கமிட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.  மாநிலத்தின் அனைத்து போலீஸ் நிலையங்கள் முன்பாகவும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment